நைஜீரிய நாட்டவர்களை உடனடியாக நாடு கடத்துங்கள் – ஜனாதிபதி கோட்டாபய!

இலங்கையில் அதிகரித்துள்ள நிதி மோசடிகளுடன் தொடர்புடைய அனைத்து நைஜீரிய நாட்டவர்களையும் உடனடியாக நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, இந்த மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நுகேகொட, மிரிஹான குடிவரவு, குடியகல்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 நைஜீரிய நாட்டவர்களை அரசாங்க செலவில் விசேட விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர்.

இவர்கள் குறித்த முகாமில் இருந்த நிலையில் பரிசு பெட்டி அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நபர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்காக மாத்திரம் 41 மில்லியன் செலவாகுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் நூற்றுக்கு 80 வீதமான செலவை பொலிஸ் மா அதிபரின் நிதியத்தில் இருந்து ஏற்பதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இணக்கம் வெளியிட்டுள்ளார்.

மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 நைஜீரியர்களில் 24 பேர், தங்கள் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி இலங்கையில் தங்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

எனினும், சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இந்த நபர்களை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேறு விமான நிறுவனங்கள் மூலம் இவர்களை நைஜீரியாவுக்கு அனுப்ப முயற்சித்த போதிலும் விமான நிறுவனங்கள் அதனை நிராகரித்துள்ளள. இதன் காரணமாக ஸ்ரீலங்கன் விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். அதற்காக கடற்படை தளபதி விருப்பம் வெளியிட்டுள்ளார். நைஜுரிய நாட்டவர்கள், தாம் பிரித்தானியர்கள் போன்று ஏமாற்றி பாரிய அளவான இலங்கையர்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply