இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நேற்று இரவு இலங்கையை வந்தடைந்த நிலையில், இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றார்.
தலதா மாளிகைக்குச் சென்ற அவரை தியவதன நிலமே வரவேற்றுள்ளார்.
தலதா மாளிகையில் இந்தியா மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக வெளியுறவு செயலாளர் பிரார்த்தனை செய்தார் என இந்தியத் தூதுரம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ள இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நாளை திங்கட்கிழமை பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டு அதன் புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், இந்திய நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் யாழ் இந்திய கலாசார மத்திய நிலையத்தையும் அவர் பார்வையிடவுள்ளார்.
வெளிவிவகாரத்துறை செயலாளர் ஜயநாத் கொழம்பகேவின் அழைப்பிற்கமைய அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.