எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித அக்கறையும் இல்லை – வியாழேந்திரன்

எதிர்க்கட்சிகள்  நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்  தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கமே பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. இது எங்களை விட வளர்ச்சியடைந்த நாடுகளிற்கே சவால விடயமாக இருக்கின்றது. எனவே தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமை பெறுகின்றபோது கொவிட் தொற்றிலிருந்து விடுபட முடியும். அதன்போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

இதேவேளை கிராமிய பொருளாதாரத்தை கட்டமைத்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தினை விருத்தி செய்யும் வகையிலான விடயங்களை உயர்த்துவதற்கே அதிகளவான நிதி எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவிருக்கின்றது.

அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் புறம்தள்ளவில்லை. அதிலே நியாயம் இருக்கின்றது. ஆயினும் தற்போதைய நெருக்கடியான சூழலில் இவர்களுடைய பிரச்சனையை அணுகுவது சவாலானவிடயம். ஆயினும் அதனை தீர்ப்பதில் அரசாங்கம் கவனமாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அது சுமூகமாக தீர்க்கப்படும்.

இப்போதுள்ள எதிர்க்கட்சியினர் கடந்த ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தினை அழித்தவர்கள். வடகிழக்கு தமிழ்மக்கள் அந்த ஆட்சிக்கு கூடுதலான ஆதரவை வழங்கினார்கள். அதுபோல தமிழ் அரசியல் தலைமைகளும் அந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினையே முன்னெடுத்திருந்தனர். ஆனால் வடகிழக்குமக்கள் அபிவிருத்தி சார்ந்து எந்த முன்னேற்றத்தினை அடைந்தார்கள் என்பதை நாங்கள்சிந்திக்கவேண்டும்.

சில நாடுகளில் ஆளும் கட்சிகள் நல்லதை செய்தால் எதிர்க்கட்சிகள் அதனை பாராட்டும். இங்கு அப்படி இல்லை. தடுப்பூசி வருவதற்கு முன்னர் அதனை கொண்டுவரவில்லை என்று எதிர்ததார்கள். அதனை கொண்டுவந்த பின்னரும் விமர்சிக்கின்றார்கள். ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் பிரச்சனை, கொடுக்காவிட்டாலும் பிரச்சனை.

இவர்களது நோக்கம் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மாத்திரமே. நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை. கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வரும்போது பலகேள்விகளிற்கான பதிலை அரசாங்கம் வழங்கும்.

தமிழ்மக்களின் பிரச்சனையை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். பாதிப்பை மிக்ககூடுதலாக சந்தித்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்கப்பெறவேண்டும் என்பதில் நாங்கள் இப்போதல்ல பலவருடங்களாக எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

அவர்களுக்கு செய்யவேண்டிய ஆற்றக்கூடிய உடனடிக்கருமங்களை நாங்கள் செய்யவேண்டும். பாதிப்புக்குள்ளான மக்களுடைய நீதி நியாயம் அவர்களது எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புக்களும் ஏற்ப கிடைக்கப்பெறவேண்டும்.  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *