தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அத்துடன் தற்போது மீண்டும் மத்திய அரசு, கூடங்குளம் அணுஉலை வளாகத்தின் உள்ளே அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்ய அனுமதி அளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆழ்நிலக் கருவூல மையம் அமைப்பதற்கான இடமும் தொழில்நுட்பமும் இன்றுவரை இந்தியாவில் இல்லை.

இந்தச் சூழலில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை கட்டமைத்து, அதில் கூடங்குளம் அணுஉலை மட்டுமின்றி இந்தியாவிலுள்ள ஏனைய 22 அணுஉலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயற்படுத்த மத்திய அரசு முனைப்பாக இருக்கிறது.

அணுக் கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இதுவரையில் இல்லை என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே அணுக்கழிவுகளை முழுமையாக செயல் இழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றன.

ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திலேயே அணுக் கழிவு மையத்தை உருவாக்கி, அணுக்கழிவுகளைக் கொட்டி சேமிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தென் தமிழ்நாட்டையே சுடுகாடாக  மாற்றும் முயற்சியாகும்.

எனவே, இந்த திட்டத்தைச் செயற்படுத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்பதுடன் தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *