தனக்கு என்று எதையும் தேடாமல் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒருவர் ஊடகவியலாளர் அந்தோனி மார்க்- மன்னார் அரச அதிபர்

மக்கள் தமது உரிமைகளுக்காகவும் , தேவைகளுக்காகவும் எந்த இடத்தில் போராட்டங்களை மேற்கொண்டாலும் அந்த இடத்தில் எல்லாம் அவருடைய பிரசன்னமும், ஆதரவையும் வழங்கி வந்த மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களின் இழப்பு மன்னார் மாவட்ட மக்களுக்கு பாரிய பேரிழப்பு என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 78 ஆவது வயதில் கொவிட் தொற்று காரணமாக கடந்த மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவர் மன்னார் மாவட்டத்தில் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (5) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருவர் உலகில் வாழ்கின்ற போது அவருடைய செயலினைப்பற்றி அல்லது அவரைப் பற்றி புகழ்ந்து கூறுகின்ற போது சில சமயங்களில் சுயநலம் எதுவும் இருக்கலாம்.

ஆனால் ஒருவர் இறந்த பின்னர் அவரின் மரணத்தின் பின் அவருடைய நல்ல செயல்பாடுகளை,அவருடைய நன்மை தனங்களை மற்றும் அவரின் புகழை நாங்கள் எடுத்துக் கூறுகின்ற போது அவர் வாழ்ந்த போது நல்ல வாழ்க்கையை இவ் உலகில் வாழ்ந்துள்ளார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அமரத்துவம் அடைந்த அமரர் அந்தோனி மார்க் அவர்களை சிறிய வயதில் இருந்தே அறிந்துள்ளேனர்.

அவர் ஆற்றியுள்ள பணிகளை நான் கண்ணூடாக பார்த்தேன்.குறிப்பாக அவர் விவசாயத்திற்கும்,நீர்ப்பாசனத்திற்கும் தனது எழுத்து ஆற்றல் மூலம் பல வரலாற்றையும், பாரம்பரியத்தையும் அடுத்த சந்ததிக்கு அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

சிறந்த மொழி ஆற்றல் கொண்ட மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுள்ளார்.கடந்த காலங்களில் எந்த ஒரு நிகழ்விற்கும் சிங்கள மொழிபெயர்ப்பு என்றால் அவரை எதிர் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

அவ்வாறான பல திறமைகளைக் கொண்டிருந்த அவர் ஓர் அரச ஊழியராகவும் திகழ்ந்தார். ஒரு அரச ஊழியர் எவ்வாறு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தார்.

சுமார் 33 வருடங்கள் அரச துறையில் குறிப்பாக காணியுடன் தொடர்புடைய பணியில் காணி உத்தியோகத்தராகவும், உதவி காணி ஆணையாளராகவும் கடமையாற்றிய போதிலும் இறுதி வரைக்கும் தனக்கு என ஒரு துண்டு காணி இல்லாமல் வாடகை வீடுகளில் தனது வாழ் நாளை கழித்து வந்தார்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திற்காக தன்னையே அர்ப்பணித்து செயலாற்றி உள்ளார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தனக்கு என்று எதையும் தேடாமல் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒருவருக்கு நாங்கள் இவ்வாறான ஒரு அஞ்சலி நிகழ்வின் மூலம் நன்றி செலுத்த வேண்டியது எமது கடமை.

மக்கள் தமது தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த இடத்தில் போராடுகின்றார்களோ அந்த இடத்தில் எல்லாம் அவருடைய பிரசன்னமும், ஆதரவும் இருக்கும்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்,மக்களுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் தான் சார்ந்த இனத்தை,மொழியை,அதீதமாக நேசித்த ஒருவர்.

இந்த நாட்டை ஆக்கிரமித்துள்ள கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.அவரின் இழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *