சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது- பிரதமர்

கொரோனா தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்த போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் ஊடாக முதல் முறையாக ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையும் இதன்போது இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”எமது அன்பான ஆசிரியர்கள் தொன்மையான காலம் முதல் நல்லொழுக்கமுள்ள குடிமக்களை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என்பதை நாம் அறிவோம்.

ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்காக நீங்கள் ஆற்றும் இச்சேவையை நாம் எப்போதும் பாராட்டுகின்றோம்.

குழந்தைகளுக்கான சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக ஆசிரியர்களாகிய நீங்கள் மேற்கொள்ளும் உன்னத பணியை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம். அதனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் ஆசிரியர் துறைக்கான வரவேற்பை நாம் மேலும் உறுதிபடுத்துவோம்.

ஆசிரியர்களின் கௌரவத்தை பாதுகாத்த மற்றும் பாதுகாக்கும் ஒரு அரசாங்கமாக உங்களது சாதாரணமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க நாம் தயார் என்பதை நினைவூட்ட வேண்டும். தொழில்முறை போராட்டங்களின் போது ஆசிரியர் கௌரவம் குறித்து சிந்திக்குமாறும், பிள்ளைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் நாம் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் வகுப்பறையில் இருந்து கல்வி கற்பிப்பதற்கு பதிலாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக கற்பிப்பதற்கான உங்களது முயற்சிகளை நாம் நன்கு அறிவோம்.

அரச சேவையின் ஒரு பகுதியினரான ஆசிரியர்களுக்கு முறையான உத்தியோகப்பூர்வ அடையாள அட்டைகளேனும் இல்லை. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முதல் முறையாக ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சினால் சேவை அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள பிள்ளைகளுக்கு சிறந்ததை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்கமைய உலக தரத்திற்கு ஏற்ற வகையில் இலங்கை ஆசிரியர்களை தயார்ப்படுத்தும் சவாலை நாம் பொறுப்பேற்றுள்ளோம். அதற்காக கல்வி அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் முன்னெடுக்கும் பணிகளை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம்.

‘ஆசியர்கள் வலுவான வில். பிள்ளைகள் அந்த வில்லிலிருந்து பாயும் அம்புகள்’. கலீல் ஜிப்ரான் எனும் அறிஞர் கூறியவாறு அந்த அம்பை மேலும் கூர்மையாக்கி சரியான இலக்கை நோக்கி அனுப்புவது ஆசிரியர்களின் கடமையாகும் என நான் நம்புகின்றேன்.

எனவே கொவிட் தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என்பதை நான் மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

பிள்ளைகளுக்கு கல்வியூட்டி தேசத்தை கல்வி அறிவால் ஒளிரச் செய்வதற்கு ஆசிரியர்களுக்கு பலமும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என  பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply