யாழ் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக தடுப்பூசி யூலை 5ம் திகதி முதல் 10ம் திகதிவரை

யாழ் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக தடுப்பூசி வழங்குவதற்கு 50,000 சினோபாம் தடுப்பு மருந்துகள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் யூலை மாதம் 5ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறும் என வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் 49,602 பேருக்கு முதல் தடவை கோவிட்-19 தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது.

இவர்களுக்கான இரண்டாவது தடவை தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த யூன் 28 ம் திகதி முதல் யூலை 3 ம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 46,648 பேர் இரண்டாவது தடவைக்கான தடுப்பு மருந்தினை பெற்றுக்கொண்டனர்.

முதல் தடவை பெற்றுக்கொண்டவர்களில் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பதனால் அப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களுக்கான இரண்டாவது தடவைக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும்.

இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்குதலானது சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்து நிலை உடைய கர்ப்பிணிதாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணிதாய்மார்களுக்கும், அத்துடன் முன்களப்பணியாளர்களாக உள்ள கர்ப்பிணிதாய்மார்களுக்கும் வழங்கப்படும். மேலும்; தொழிற்சாலை பணியாளர்களுக்கும், ஏனைய முன்களப்பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அறியத்தரப்படும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும், எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறே மேற்குறிப்பிடப்பட்ட வகையில் அடங்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் ஒழுங்குகள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியினால் ஏற்பாடு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *