வடமாகாண சபையில் சிங்கள நியமனங்கள் – தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கண்டனம்! SamugamMedia

வடக்கு மாகாண சபையில் காணப்படும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தென்பகுதியில் இருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகளை மத்திய அரசாங்கமும், வடக்கு மாகாண சபையும் இணைந்து மேற்கொள்வதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண சபையில் சிற்றூழியர்கள்,  தகைசார் பணியாளர்கள் உட்பட சுமார் 1200 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக நாட்டின் தென்னிலங்கையில் உள்ள  மாகாணங்களில் இருந்து 1100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாண சபையால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி இந்த கோரிக்கைகளை வடக்கு மாகாண சபை மேற்கொள்ளக் கூடாது அவ்வாறு இந்த நடவடிக்கையை ஆரம்பித்து இருந்தால் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் அதிகளவானோர் உரிய நேரங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் இன்று வரை தங்களது வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தென்னிலங்கையில் இருந்து சிங்களவர்களுக்கு வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகளை கொடுப்பதை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

எனவே இந்தச் செயற்பாட்டை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டித்துள்ளது.

அத்துடன் தமிழர்களுக்கு வடக்கு மாகாண சபையில் இருக்கக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் அனைத்தையும் இந்த மாகாணத்திலே வாழும் வேலையற்ற தகைமை உடைய அனைவருக்கும் முதன்மை அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும்,

வடக்கு மாகாண உயர் அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் ஊடகங்கள் வாயிலாகவும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கடிதங்கள் வாயிலாகவும் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் இந்த கோரிக்கையை வட மாகாண சபை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் வடக்கின் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்கள் ஓரணி திரண்டு போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாக உள்ளனர் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *