முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களின் தேவைக்காக ஒட்சிசன் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து ஒட்சிசன் பெற்றுக் கொண்டு வந்து நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை கடந்த காலத்தில் தொடர்ந்து வந்துள்ளது
இந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைந்த கொவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒட்சிசனை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் வெளி மாவட்டங்களில் இருந்தே ஒட்சிசனை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் கொவிட்-19 பாதுகாப்பு அவசர மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் யுனப்ஸ்(UNOPS) நிறுவத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய தூதரகத்தின் 200 மில்லியன் ரூபா செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு யூலை மாதம் தொடங்கப்பட்ட ஒட்சிசன் ஆலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான ஒட்சிசன்கள் அங்கேயே உற்பத்தி செய்யப்படுவதுடன் மேலதிகமாக வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கும் ஒட்சிசனை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவுஸ்ரேலிய நாட்டின் இந்த திட்டம் தொடர்பில் 22.03.22 நேற்றைய தினம் இலங்கைக்கான அவுஸ்ரோலிய உயர் ஆணையாளர் பால் ஸ்டீபன் (He Paul Stepjans) உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் அவுஸ்ரேலிய தூதரகர் மற்றும் அவரது பாரியார் மற்றும் யுனப்ஸ் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் மற்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் வாசுதேவா மற்றும் மருத்துவமனை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதன்போது ஒட்சிசன் ஆலையினை பார்வையிட்டுள்ளதுடன் மாவட்ட மருத்துவமனைக்கு இந்த பாரிய ஒட்சிசன் ஆலைக்கான நிதி உதவியினை வழங்கிய அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து மாவட்ட மருத்துவமனை மண்டபத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.